செவ்வாய், 16 ஜூன், 2009

கிரிக்கெட் மோகம்
பதினோரு முட்டாள்கள் விளையாடுவதைப் பலகோடி முட்டாள்கள் பார்க்கின்றார்கள் என்று ஒருவர் ஒரு விளையாட்டைப் பற்றிக் கூறினார். அது தான் கிரிக்கெட் என்ற விளையாட்டாகும்.

இன்றைக்கு நம் இந்திய நாட்டில் தேச பக்திக்குரிய அடையாளமாக இந்த விளையாட்டு மாறிவிட்டது.

இந்திய கிரிக்கெட் அணியை நேசிப்பவன் தான் உண்மையான இந்தியன். மாற்று அணியையோ, அந்த அணி வீரர்களின் விளையாட்டையோ ரசிப்பவன் இந்தியாவிற்கு எதிரானவன் என்று கருதுமளவிற்கு இந்த விளையாட்டு இந்திய மக்களிடம் மிகுந்த மதிப்பைப் பெற்று விட்டது. அரசியல்வாதிகள் கூட கிரிக்கெட் வீரர்களைக் காட்டி ஓட்டுகளைப் பெற்றுவிடலாம் என்ற முடிவிற்கே வந்து விட்டனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் துவங்கியவுடன் நம் இந்திய நாடே ஒரு வித பரபரப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இந்து மதத்தவர்கள் இந்தியா வெற்றி பெறுவதற்காகப் பலவிதமான யாகங்களைச் செய்து கொண்டிருக்கும் வேளையில் சில இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையும் நடத்தியுள்ளனர்.

மேலும் நம் நாட்டின் பிரதமர், இந்திய அணி வெற்றி பெற பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எங்கும் இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றுமா? என்ற பேச்சு தான். இந்த கிரிக்கெட் மோகத்திற்கு பெண்களும் விதிவிலக்கல்ல..

தாங்கள் நேசிக்கும் அணி தோற்றுவிட்டால் அதற்காக மிகப்பெரும் அளவில் கவலைப்படக்கூடிய மக்களையும் பார்க்கிறோம். இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தோற்று விட்டதற்காக ஒரு ரசிகர் மாரடைப்பில் இறந்து விட்டார். விளையாட்டு வீரர்களின் உருவப் பொம்மையை எரிப்பது, அவர்களின் வீடுகளைத் தாக்குவது போன்ற வன்முறைச் செயல்களிலும் தீவிர ரசிகர்கள் ஈடுபடுகின்றனர். இந்தியா தான் ஜெயிக்கும், பாகிஸ்தான் தான் ஜெயிக்கும் என்று இரு பிரிவாகப் பிரிந்து பலர் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.

இந்தக் கிரிக்கெட் மோகம் முஸ்லிம்களையும் விட்ட பாடில்லை. இறைவனைத் தொழுவதற்காகக் கட்டப்பட்ட பள்ளிவாசல்களிலும் கூட இந்த கிரிக்கெட் பேச்சு தான்.

பல ஊர்களில் மார்க்கப் பிரச்சார நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆலோசனை செய்யும் போது இன்றைக்கு மேட்ச் உள்ளது; மக்கள் நிகழ்ச்சிக்கு வருகை தர மாட்டார்கள்; எனவே வேறொரு நாளில் வைத்துக் கொள்வோம் என்ற ஆலோசனையைப் பலர் கூறுகிறார்கள்.

பலர் இந்த போட்டியைப் பார்த்து ரசிப்பதிலேயே தங்கள் தொழுகையை மறந்து விடுகிறார்கள். நல்லமல்களைத் தொலைத்து விடுகிறார்கள்.குர்ஆன், சுன்னாவைப் பின்பற்றாதவர்கள் அறியாதவர்கள் வேண்டுமானால் வழி தெரியாமல் இது போன்ற விளையாட்டுக்காகத் தங்கள் நேரங்களையும் காலங்களையும் வீணாக்குவார்கள். ஆனால் குர்ஆன், ஹதீஸை கொள்கையாகக் கொண்டவர்கள் கூட இது போன்ற வீணான காரியங்களில் மூழ்குவது தான் நமக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

அல்லாஹ் கூறுகிறான்:
”(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்” என கூறுவீராக!

(அல் குர்ஆன் 63:11)

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

(அல்குர்ஆன் 6:32)

இந்த வசனங்களில் இறைவன் கூறுவதைப் போன்று தான் நம் சமுதாயத்தவர்களின் நிலை மாறிவிட்டது. இந்த விளையாட்டைப் பார்ப்பதற்காக பலர் தொழுகைகளைத் தொலைத்து விடுகின்றனர். இரவு முழுவதும் இதைப் பார்ப்பதற்காகக் கண் விழித்துக் காத்திருக்கின்றனர்.பொழுது போக்கிற்காக, குறிப்பிட்ட நேரம் மார்க்கத்திற்கு முரணில்லாத எந்த ஒரு விளையாட்டையும் பார்ப்பது தவறு கிடையாது. ஆனால் இந்த விளையாட்டைப் பார்ப்பதை மார்க்கக் கடமை போல் கருதி, மார்க்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைக் கூட புறந்தள்ளி விட்டு, தங்களுடைய காலங்களையும் நேரங்களையும் வீணாகக் கழிப்பவர்களை காலத்தின் அருமையை உணராதவர்கள் என்றே கருத வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:
காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.

(அல்குர்ஆன் 104வது அத்தியாயம்)

தமக்குக் கிடைத்த மிகக் குறைந்த வாழ்நாட்களில் நல்லறங்கள் செய்து நன்மைகளை சேர்க்காமல் அவற்றை வீணாக்குபவன் மிகப்பெரும் நஷ்டத்தில் இருக்கிறான் என்பதைத் தான் மேற்கண்ட அத்தியாயத்தில் இறைவன் நமக்கு உணர்த்துகிறான்.

காலத்தின் அருமை தெரியாமல் நாம் அவற்றை வீணிலும் விளையாட்டிலும் கழித்து விடக் கூடாது. நம்முடைய மரணம் வருவதற்கு முன்பாகவே நமக்கு கிடைக்கின்ற காலங்களை நல்லறங்கள் செய்வதிலே விரைவு படுத்த வேண்டும்.. இதைத் தான் இறை நம்பிக்கையாளர்களுக்குரிய பண்பாக இறைவன் கூறுகின்றான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர்.

(அல்குர்ஆன் 3:114)

அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.

(அல்குர்ஆன் 21:90)

உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன் 3:133)

இவ்வுலக வாழ்க்கையில் நம்மை ஈர்க்கின்ற இந்த வீணான மனோ இச்சைகளில் அளவு கடந்து வீழ்வது தான் நம்முடைய மறுமையின் தோல்விக்குக் காரணமாக அமைகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுவர்க்கம் சிரமங்களால் சூழப்பட்டுள்ளது. நரகம் மனோஇச்சைகளால் சூழப்பட்டுள்ளது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: தாரமி (2720)

நமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களை வீணிலும் விளையாட்டிலும் கழித்து விடாமல் மறுமை வாழ்வின் வெற்றிக்காக அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நபியவர்கள் பல ஹதீஸ்களில் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து நற்செயல்கள் புரிந்து கொள்ளுங்கள். (அக்குழப்பங்களின் போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறை மறுப்பாளனாக மாறி விடுவான். மாலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இû றமறுப்பாளனாக மாறி விடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்று விடுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் (186)

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:இறந்து போனவரை மூன்று பொருட்கள் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கி விடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பி விடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கி விடும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்: புகாரி (6514)

மேலும் பலர் தமக்குரிய ஒய்வு நேரங்களை சரியாகப் பயன்படுத்தாததால் இழப்புக்குள்ளாகி விடுகின்றனர் எனவும் நமக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.
1. ஆரோக்கியம்
2. ஓய்வு
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி (6412)

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் எங்களுக்குரிய மூங்கிலாலான ஒரு குடிசை வீட்டைச் சரி செய்து கொண்டிருந்த நிலையில் நபியவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது, ”இது என்ன?” என்று கேட்டார்கள். ”வீடு பாழடைந்து விட்டது. அதைச் சரி செய்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினோம். அதற்கு நபியவர்கள், ”(மரணம் என்ற) அக்காரியம் இதை விட மிக விரைவானது” என்று கூறினார்கள்.

நூல்: திர்மிதி (2257)

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உனது ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தை செலவிடு. உனது இறப்புக்குப் பிந்திய நாளுக்காக உனது வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு.

நூல்: புகாரி (6416)

எனவே விளையாட்டை விளையாட்டாகக் கருதுவோம். நம்முடைய அதிகமான கால நேரங்களை நல்லமல்கள் அதிகம் செய்வதில் ஈடுபடுத்துவோம். இறைவன் நம் அனைவரையும் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்ற மக்களாக ஆக்கி அருள்புரிவானாக!

-இப்னு யூசுப் கடையநல்லூர்

Read more...

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP